ஒடிசாவிலிருந்து சேலத்துக்கு ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஒடிசாவில் இருந்து சேலத்துக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்பவர்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனிடையே ரெயில் மூலம் சேலத்துக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் ஜங்சன் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒடிசா மாநிலம் பலேஷ்வர் பகுதியை சேர்ந்த திவ்யஜோதி பாண்டா (வயது 24), பிப்திபசான் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். இதில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து திவ்யஜோதி பாண்டா, பிப்திபசான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் சேலத்துக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் இந்த கஞ்சாவை சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து மாநகரில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.