போலி மது விற்ற டாஸ்மாக் பார் ஊழியர்கள் 3 பேர் கைது
பள்ளிபாளையத்தில் டாஸ்மாக் பாரில் போலி மது விற்பனை செய்த ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பார் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் போலி மதுபான பாட்டில்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பள்ளிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகரன் தலைமையிலான போலீசார், பள்ளிபாளையம் எஸ்.பி.பி காலனி பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையின் உள்ளே உள்ள பாரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40 போலி மதுபான பாட்டில்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதிக விலைக்கு விற்க கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 232 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து, அதை விற்பனைக்காக வைத்திருந்த ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த அசோக் வயது 36, லட்சுமி பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயது 30, வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த சங்கர் 29 ஆகிய மூவரை கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள மதன்குமார், ஈஸ்வரன் மற்றும் மதுபான கூடத்தின் உரிமையாளர் குகனேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிபாளையம் போலீஸ் காவல்துறையினரின், இந்த அதிரடி நடவடிக்கை பள்ளிபாளையம் பகுதி மதுபான பார் உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.