திருச்சியில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டு கொலை
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் கொம்பன் ஜெகன் (எ) ஜெகன் (30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த மே 19ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்ட இவரது கூட்டாளிகள் 9 பேரை திருவறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் பதுங்கியிருந்த ஜெகனை போலீசார் பிடிக்க முயன்ற போது காவல்துறை உதவி ஆய்வாளர் வினோத் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற ஜெகனை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். ரவுடி ஜெகன் மீது பல்வேறு கொலை முயற்சி உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெகன் உடல் லால்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது காயமடைந்த உதவி ஆய்வாளர் வினோத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.