மது குடிக்க பணம் தர மறுத்த தொழிலாளியை தாக்கிய ஒருவர் கைது
சேலத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த தொழிலாளியை சரமாரியாக தாக்கிய கும்பலில் ஒருவர் கைது
By : King 24x7 Website
Update: 2024-01-24 07:34 GMT
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 21), தச்சு தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி அழகாபுரம் ஏரிக்கரை பகுதியில் தனது நண்பரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியது. இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கற்கள் உள்ளிட்டவைகளால் சரமாரியாக தாக்கியது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் காயம் அடைந்த மோகன்குமாரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோகன்குமாரை தாக்கியது வட அழகாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (23), செந்தில்குமார், வசந்தன், சிவா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.