செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர் நீதிமன்றத்தில் சரண்
ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் காவலரை காரில் மோதி கொன்று தப்பிய செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குண்ட்ரவாரி பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் செம்மர கடத்தல் தடுப்புப்பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 5-ந் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்த முயன்றபோது அந்த கார் அங்கிருந்த போலீசார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் போலீஸ்காரர் கணேஷ் (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
இச்சம்பவம் தொடர்பாக செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் ராமன் (31) என்பவர் உள்ளிட்ட 8 பேர் மீது ஆந்திரா கே.வி.பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் ராமன், கடந்த 14-ந் தேதி, விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்தார். தலைமறைவாக இருந்துவரும் மற்ற 5 பேரை பிடிக்க கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் ஆந்திரா போலீசார் முகாமிட்டு வலைவீசி தேடி வந்தனர்,
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடுத்த மேல்நிலவூர் உண்டக்கல்வளவு பகுதியை சேர்ந்த முத்து மகன் மகேந்திரன் (29) என்பவர் விழுப்புரத்தில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் சரணடைந்தார், இதையடுத்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ராதிகா உத்தரவிட்டார். அதன்பேரில் மகேந்திரன், சிறையில் அடைக்கப்பட்டார்.