கும்மிடிப்பூண்டியில் சிறுவன் கடத்தி கொலை

நரபலி கொடுப்பதற்காக சிறுவன் கடத்தப்பட்டானா என்ற உண்மை பின்னணியை கண்டறிய வேண்டும் என கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-21 02:19 GMT

அனிஷ்

கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் -- சிந்துமதி தம்பதி. இவர்களது மகன் அனிஷ், 8. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இம்மாதம், 16ம் தேதி மாலை, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அனிஷ் திடீரென மாயமானார். அவனை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அன்று இரவு பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதே கிராமத்தில் வசிக்கும் ரேகா, 32, என்ற பெண், சிறுவனை டூ--வீலரில் அழைத்து சென்றதை உள்ளூர் இளைஞர்கள் சிலர் பார்த்துள்ளனர். ரேகாவை பிடித்து போலீசார் விசாரித்த போது, அவர் சிறுவனை கடத்தி கொலை செய்தது தெரிந்தது. சிறுவனை கடத்தி அவனது பெற்றோரிடம் பணம் பறிப்பதற்காக, ரேகாவும், ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் அருகே காம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரவணய்யா, 50 என்பவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிறுவனை கடத்தி, வரதையாபாளையம் அருகே ஒரத்துார் பேருந்து நிறுத்தம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிறுவன் தொடர்ந்து கூச்சலிட்டு அழுததால் அவனை, ரவணய்யா கழுத்தை இறுக்கி கொலை செய்து மூட்டை கட்டி புதரில் வீசியுள்ளார். இந்த தகவலை ரேகா போலீசாரிடம் தெரிவித்துஉள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பாதிரிவேடு போலீசார், ஆந்திர போலீசார் உதவியுடன் மூட்டையில் கட்டப்பட்டிருந்த சிறுவனின் உடலை மீட்டு, காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று பல்லாவாடா கிராம பெண்கள் 100 பேர், மாதர்பாக்கம் பகுதி மூன்று சாலை சந்திப்பில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 'நரபலி கொடுப்பதற்காக சிறுவன் கடத்தப்பட்டானா என்ற உண்மை பின்னணியை கண்டறிய வேண்டும்' என, கோஷமிட்டனர். அவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி., மீனாட்சி தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர். ஆந்திராவில் தலைமறைவாக உள்ள ரவணய்யாவை மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News