பாலத்தில் மோதிய கார் - 4 பேர் பலி, 7 பேர் காயம்
பேராவூரணி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும், அதிக காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000, சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 25,000மும் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மூனாவது மைல் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், பாக்கியராஜ் மகன் மரிய செல்வராஜ் (37), இவரது மனைவி பாத்திமா மேரி (31), இவர்களது மகன் சந்தோஷ் செல்வம் (7) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), பாக்கியராஜ்வ(64), ஞானம்மாள் (60), ராணி (40) சின்னப்பாண்டி (40) ஆகிய 11 பேரும், வேளாங்கண்ணியில் உள்ள சர்ச்சில் சந்தோஷ் செல்வத்திற்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக வெள்ளிக்கிழமை இரவு டவேரா காரில் ஊரிலிருந்து புறப்பட்டனர். காரை ஓட்டுநர் சின்னப்பாண்டி ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை சுமார் 5 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோரா சுற்றுலாத்தலம் உள்ள பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த சிறு பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே ராணி, சின்னபாண்டி, பாக்யராஜ், ஞானம்மாள் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ், 6 க்கும் மேற்பட்டவை சம்பவ இடத்திற்கு வந்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர், அருகில் இருந்தோர் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்தவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துணை காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து, சேதுபாவாசத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவாரணம், முதலமைச்சர் இரங்கல் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும், அதிக காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000, சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 25,000மும் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கருவேல மரங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் கருவேல மரங்கள் மண்டிக் கிடப்பதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. அதிகாலை நேரத்தில் இருளில் கருவேல மரங்கள் சாலையை மறைத்ததால், வழியில் இருந்த சிறு பாலத்தில் தெரியாமல் கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு பக்கமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதியில் அவசர விபத்து சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.