பாஜக நிர்வாகிக்கு வெட்டு - மாநில நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு
முன்விரோதம் காரணமாக பாஜக மாவட்ட நிர்வாகியை வெட்டிய வழக்கில் பாஜக மாநில நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Update: 2024-01-12 09:14 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டாலிசன் என்ற கண்ணன் (46). இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். கடந்த மாதம் மண்டைக்காடு புதூர் சர்ச் திருவிழாவின்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் ஜஸ்டாலிசன் கலந்து கொண்டார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாழக்குடி பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா மீனவர் அணி மாநில பொதுச் செயலாளர் சகாயம் என்ற ஐயப்பனின் தூண்டுதலின் பேரில், கருங்கல் அருகே உள்ள பாரியக்கல் பீச்சில் வைத்து அடையாளம் தெரியாத மூன்று பேர் ஜஸ்டாலிசனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஜஸ்டாலிசன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சகாயம் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகிறார்கள்.