6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த எலக்ட்ரீசியன், மீது பெண் புகார்.
திருப்பூரில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் மீது கைக் குழந்தையுடன் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
By : King 24x7 Website
Update: 2023-12-31 12:33 GMT
திருப்பூரில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் மீது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது திருப்பூர் மாஸ்கோநகரை சேர்ந்தவர் தேவி (28).திருமணமான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் கணவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்தார். இந்தநிலையில் தேவிக்கு திருப்பூரில் எலக்ட்ரீஷியனாக பணி புரியும் குணசேகரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது குணசேகரன் தேவியிடம் ,கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான உதவிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும், ஆசைவார்த்தைகள் கூறி தேவியை குணசேகரன் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 2பேரும் 3 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்தநிலையில் குணசேகரன் நடவடிக்கையில் தேவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் விசாரணை நடத்திய போது, குணசேகரன் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குணசேகரனிடம் தட்டிக்கேட்டார். இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் குணசேகரனும் அவரது தாயும் சேர்ந்து தேவியை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குணசேகரன் மேலும், தேவியுடன் சேர்த்து 6 பெண்களை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகை பறிப்பில் ஈடுபட்டதும், 7&வதாக கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்ய முயன்றதும் தெரியவந்தது. திருப்பூரில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த குணசேகரன் பல்வேறு இடங்களுக்கு பணிக்கு சென்று வந்துள்ளார். அப்போது தனியாக வசித்து வரும் ஆதரவற்ற பெண்கள், விதவை பெண்களிடம் நெருங்கி பழகி திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. கல்யாண மன்னனான குணசேகரன் திருமணம் செய்த 6 பெண்களின் பெயர்களையும் தனது கையில் பச்சை குத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள குணசேகரனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.