இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் - 5 பேர் கைது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்து இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கியதாக 5 பேரை குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2023-12-15 02:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

போலி பாஸ்போர்ட் தயாரித்து இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்குவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் , தஞ்சாவூர் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கடந்த 12 ஆம் தேதியன்று, பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் கண்காணித்த போது, ஆண்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (64) என்பவர் போலி பாஸ்போர்ட் ஒன்றினை, கும்பகோணம் மேல வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த வடிவேல் மற்றும் ராஜாமடம் பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகியோரிடம் கொடுத்த போது,  சுற்றி வளைத்து மூவரையும் பிடித்து விசாரித்தனர். 

அப்போது இந்த போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கு உடந்தையாக திருச்சி உறையூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ், கும்பகோணம் மகாமக குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு மற்றும் பகுருதீன் ஆகியோர் இருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து, தஞ்சை  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு அந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி  முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.  இதையடுத்து, நீதிபதி சத்யா உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இது தொடர்பாக  இந்த வழக்கில் தொடர்புடைய சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தர் சேஷா மற்றும் அவரது உதவியாளரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News