பறக்கும்படையினர் சோதனையில் 20.6 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆறுமுகநேரியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட 20.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-02 01:44 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கடலோர சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அந்தோணி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற காரை வழிமறித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அந்த காரின், நம்பர் பிளேட்டில் அரசு வாகனம் என்று எழுதப்பட்டு இருந்தது. காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். கார் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 டிராவல் பேக்குகளில் மொத்தம் 20 கிலோ 600 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

இதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதனை தமிழகம், கேரள மாநிலத்தில் விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த திருச்செந்தூர் ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த அமிர்தராஜ் மகன் கீதன் (வயது 29), உடன்குடி கொத்துவாப்பா தெருவை சேர்ந்த செரீப் மகன் சாகுல் அமீது (27), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதுநகரைச் சேர்ந்த முனுசாமி மகன் வினோத் (29), இவருடைய மனைவி ஆர்த்தி (20), சண்முகம் மகன் ஹரிபாபு (30), கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னுல் ராபிக் மகன் செமியம் (30) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  கார் மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கைதான 6 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்றும், கைதான கீதன், சாகுல் ஹமீது ஆகிய 2 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா கடத்தி பதுக்கியதாக பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆறுமுகநேரியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்திய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News