திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரூ.28 லட்சம், 14 பவுன் நகைகள் மோசடி
கும்பகோணம் அருகே பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ. 28 லட்சம் ரொக்கம், 14 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்ததாக இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து, இரண்டாவது திருமணம் செய்வதற்காக இணையவழியிலான திருமண தகவல் மையத்தில் 2023, செப்டம்பர் 18 ஆம் தேதி பதிவு செய்தார். இதைப் பார்த்தை விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் சொக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் சிபி சக்கர வர்த்தி (38) விருப்பம் தெரிவித்தார்.
அப்போது, தான் ஒரு பணக்காரர் என்றும், திருமணம் செய்து கொள்ளும் பெண் காசு, பணம், நகைகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என அப்படியொரு பெண்ணை தேடிக் கொண்டிருப்பதாகவும் சிபிசக்கரவர்த்தி கூறினார். மேலும், தான் ஒரு ஐ.டி. நிறுவன ஊழியர் என்றும், பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருவதாகவும், தன்னிடம் யார் அதிக பணம், நகைகள் கொடுக்க முன் வருகிறார்களோ அவரைத் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளைக் கடைசி வரை பார்த்துக் கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
இதை நம்பிய அப்பெண்ணும் சிபி சக்கரவர்த்தியிடம் குழந்தைகளின் பெயரில் இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம், 14 பவுன் நகைகளை கொடுத்தார். அதன் பின்னர், சிபி சக்கரவர்த்தியின் கைப்பேசிக்கு அப்பெண் பல முறை தொடர்பு கொண்டபோது, இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், சிபி சக்கரவர்த்தியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பெண் விசாரித்ததில் சிபி சக்கரவர்த்தி இதுபோல பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து சிபி சக்கரவர்த்தியை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 15 பவுன் நகைகள் ரூ.2 லட்சம் ரொக்கம், கைப்பேசி, கார் ஆகியவற்றை பறி முதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.