தாய் -க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - சென்னையில் துணிகரம் !!
சென்னை கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் தலைவர் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக அங்கிருந்த சக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர் பாலாஜியை மீட்டு அவசர சிகிச்சை பேரில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவரை கத்தியால் குத்திய பெருங்களத்துரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து, அவருடன் இருந்த உறவினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனின் தாயார் புற்று நோய்க்காக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த ஒரு நபரும் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரை குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைக் கண்ட பொதுமக்களும், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி காவல்துறையினர், மருத்துவரை கத்தியால் குத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் கிடந்த மருத்துவரை குத்திய கத்தியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞருடன் இன்னொருவர் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது அந்த நபரையும் காவல்துறை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் தான் மருத்துவரைக் கத்தியால் குத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.
ஸ்டாலின் :
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று பதிவில் கூறியுள்ளார்.