அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
மயிலாடுதுறை அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தற்காலிக அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் ஐயப்பன் (35). இவர் மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக கடந்த 6மாதமாக தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம்தேதி ஆசிரியர் வேலை பார்க்கும் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரை குத்தாலம் கடைவீதியில் ஆசிரியர் பாடம் எடுக்கும் தனியார் டியூஷன் சென்டருக்கு இரவு 8 மணிக்கு யாரும் இல்லாத நேரத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதேபோல் தொடர்ந்து மாணவியை பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியுள்ளார். இதனால் வீட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் போல மாணவி இருந்துள்ளார். இதில் சந்தேகப்பட்ட பெற்றோர், மாணவியிடம் என்ன நடந்தது என்று விசாரித்ததில் ஆசிரியர் அய்யப்பன் தகாத முறையில் நடந்து கொண்டதை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை அழைத்துச்சென்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நாகவள்ளி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் ஐய்யப்பனை கைது நாகை சிறையிலடைத்தனர்.