பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர் எஸ் பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.

Update: 2024-05-17 04:42 GMT

பைல் படம் 

 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(51).இவர், திருப்பத்துார் எஸ்பி அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருப்பத்துார் எஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் எஸ்ஐயின் உறவினரான நாட்றம்பள்ளியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், எஸ்ஐயை சந்திக்க அடிக்கடி எஸ்பி அலுவலகத்துக்கு வந்து செல்வாராம். அப்போது நாராயணசாமிக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே அந்த பெண்ணிடம் நாராயணசாமி உங்களிடம் போலீசுக்கு உண்டான அனைத்து தகுதியும் உள்ளது. எனவே நீங்கள் போலீசில் சேர வேண்டும் என நாராயணசாமி ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு அவரும் சம்மதித்தார். உடனே அந்த பெண்ணை திருப்பத்துாரில் உள்ள தனியார் போலீஸ் பயிற்சி வகுப்பு ஒன்றில் அவர் சேர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் திருப்பத்துாரில் உள்ள ஒரு ஓட்டலிலுக்கு நாராயணசாமி அந்த பெண்ணை அழைத்து சென்றார். அங்கு உணவு ஆர்டர் செய்து உணவுக்காக காத்திருந்த நேரத்தில்,அந்த பெண்ணிடம் நாராயணசாமி அத்து மீறியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து திருப்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணசாமியை கைது செய்து வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட நாராயணசாமியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News