நாமக்கல் லாரி ஓனர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைப்பு
நாமக்கல் லாரி ஓனர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாமக்கல் லாரி ஓனர் வீட்டில், தேர்தலுக்காக கத்தை கத்தையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் கமிஷன் உத்தரவின்பட்டி, உரிய ஆவணம் இன்றி ஒரு நபர் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேலாக பணம் எடுத்துச் சென்றால், தேர்தல் பறக்கும்படையினர்,
அந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். பின்னர் பணத்தின் உரிமையாளர் அதற்கான ஆவணத்தை அளித்து பணத்தை திரும்பிப் பெறலாம். இந்த நிலையில், நாமக்கல் பரமத்தி ரோட்டில் - எம்.எஸ். உதயமூர்த்தி பள்ளி பின்புறம் உள்ள இ.பி காலனி பகுதியில் வசிப்பவர் செல்லப்பன் (60). எல்.பி.ஜி டேங்கர் லாரி அதிபரான இவர், பைனான்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் அரசியல் கட்சி சார்பில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக? வருமானவரித் துறையினருக்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. சுமார் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் செல்லப்பனின் வீட்டிற்குள் திடீரென நுழைந்து, அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையில், செல்லப்பனில் வீட்டில் 5க்கும் மேற்பட்ட கட்டைப்பைகளில் ரூ. 500 நோட்டுக்கட்டுகள் கொண்ட ஏராளமான பண்டில்கள் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ரூ. 80 லட்சம் வரை பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனை முடிவில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என தெரியவரும்.
கடந்த வாரம் நாமக்கல்- மோகனூர் சாலை ஐயப்பன் கோயில் பின்புறம் உள்ள பஸ் அதிபர் வீட்டில் உரிய ஆவணம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக் கணக்கான ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். அது சம்மந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.