லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் கைது
வீட்டின் உரிமையை பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலக செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவரிடம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (67) என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள பூர்வீக சொத்தில் உள்ள வீட்டின் உரிமையை தனது பெயருக்கு மாற்ற கோரி ஜனவரி 3-ம் தேதி விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் அவரது விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு வைத்து உள்ளார். இந்நிலையில் சுந்தரம் நேற்று முன்தினம் பூதப்பாண்டி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து விவரம் கேட்டபோது, ரூபாய் 10 ஆயிரம் தந்தால் மட்டுமே வீட்டின் உரிமையை பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கறாராக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரம் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் புகார் கொடுத்து உள்ளார். இந்நிலையில் மேற்படி சுந்தரம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் ரூபாய் பத்தாயிரம் லஞ்சப்பணம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ், செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் லஞ்சம் வாங்கும் போது இன்று அவரை கையும் களவுமாக பிடித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்தின் வீடு ஆரல் வாய்மொழி பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. வீட்டிலும் சோதனை முடிவற்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு பிரிவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.