மூதாட்டி கொலை வழக்கு - 3 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை
வீராணம் அருகே மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம் வீராணம் அடுத்த மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 70). இவரது அண்ணன் சுப்பிரமணி (75). இவர்கள் இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு அவர்களது வீட்டிற்குள் 3 பேர் திடீரென புகுந்தனர். தொடர்ந்து அவர்கள் சுப்பிரமணி, சரஸ்வதி ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் சரஸ்வதியை கத்தியால் குத்தியும், டியூப்லைட்டால் அடித்தும் கொலை செய்துவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடிகளான வீராணம் தைலானூரை சேர்ந்த அய்யனார் (30), அய்யந்துரை (23) மற்றும் கரூர் தவுட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், நகைக்காக மூதாட்டியை கொலை செய்த அய்யனார், அய்யந்துரை, பிரபு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீராம ஜெயம் தீர்ப்பு கூறினார்.