இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி சிலுவைப்பட்டி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட இரண்டு பைபர் படகுகள், சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கீயூப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2024-02-11 02:45 GMT

தூத்துக்குடி கடல் பகுதி வழியாக தொடர்ச்சியாக கடத்தல் கும்பல் மூலம் மஞ்சள், டீசல் ,பீடி இலைகள் ,மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கியூப் பிரிவு போலீசார் கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் கடத்தல் கும்பல் போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அவ்வப்போது கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தாளமுத்து நகர் அருகே உள்ள சிலுவைப்பட்டி கடற் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் பீடி இலைகள் கடத்துவதாக கியூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர் இதில் கடற்கரைப் பகுதியில் காவல்துறையை கண்டதும் கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இரண்டு பைபர் படகுகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 3 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்த இரண்டு பைபர் படகுகள் சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News