சொத்தை எழுதி தர மறுத்த தந்தை கொலை - மகனின் நாடகம் அம்பலம்

கருப்பூர் அருகே சொத்தை எழுதி தர மறுத்த தந்தையை கொலை செய்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-30 04:04 GMT

கைது செய்யப்பட்ட சீனிவாசன் 

சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி ஈச்சங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 74). விவசாயி. இவருடைய மனைவி அலமேலு (65). இவர்களது மகன் சீனிவாசன் (38). சீனிவாசனுக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 27-ந் தேதி அலமேலு கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது காளியப்பன் காதில் ரத்தம் வடிந்த நிலையில் தலையில் காயத்துடன் கிடந்தார். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு காளியப்பன் பரிதாபமாக இறந்தார்.

அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்பட்டது. காளியப்பன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் இரும்பு கம்பி, கட்டையால் காது, தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் தாக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் காளியப்பன் மகன் சீனிவாசனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த சீனிவாசன் தனது தந்தையை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீஸ் விசாரணையில், மதுப்பழக்கத்துக்கு ஆளான சீனிவாசன், தந்தையின் பெயரில் உள்ள சொத்தை தனது பெயருக்கு மாற்றி தரும்படி பலமுறை கூறியுள்ளார். காளியப்பன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உருட்டு கட்டை, கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்துள்ளார். பின்னர் காளியப்பன் தவறி விழுந்து காயம் அடைந்துள்ளதாக தாய் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளார். ஆனால் காளியப்பன் உடல் பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது உறுதியானது.. உடனே போலீசார் காளியப்பன் சாவு வழக்கை கொலை வழக்கமாக மாற்றி சீனிவாசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News