எம்பிபிஎஸ் மாணவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் - மது பாட்டில்களால் தாக்குதல் !!
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் 3-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் மது பாட்டில்களால் தாக்குதல். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிற நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஆண்ட்ரோ ஆலன் (21) என்ற மாணவர், விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் விடுதி கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு ஆலன் அறைக்கு சென்ற பொழுது 5-ம் ஆண்டு மாணவர்களான கிஷன் (24) மற்றும் தியானேஷ்(24) ஆகிய இருவரும் ஆலனை அழைத்து கிண்டல் செய்ததாகவும், சக ஜூனியர் மாணவர்களை அழைத்து வருமாறு ஆலனை வற்புறுத்தியதாக தெரியவந்தது.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால், தாங்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களால் ஆலன் தலையில் சீனியர் மாணவர்கள் இருவரும் அடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த ஆலனை சக மாணவர்கள் மீட்டு, வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சீனியர் இருவரும் மதுபோதையில் இருந்ததாக சக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸார் கல்லூரி விடுதிக்கு விசாரணை நடத்த சென்றனர். மருத்துவமனை குழு நிர்வாகம் விசாரணை செய்ய போலீஸார் அனுமதிக்கவில்லை என்பதால் இதையடுத்து, அங்கிருந்து போலீஸார் திரும்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, ``இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸில் எந்த புகாரும் வரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். விடுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.