கும்பகோணம் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு சாகும்வரை சிறை
கும்பகோணம் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும்வரை சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.;
கோப்பு படம்
கும்பகோணம் அருகே 52 வயது கூலித் தொழிலாளி தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்தாா். இதனால், கா்ப்பமடைந்த அச்சிறுமி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 2022 ஆம் ஆண்டில் சோ்க்கப்பட்டாா்.
அப்போது, இச்சிறுமியைத் தந்தையே பாலியல் கொடுமை செய்த விவரம் தெரிய வந்தது. இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தந்தையைக் கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜ் விசாரித்து சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2.50 லட்சம் நிவாரணம் வழங்குமாறும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.