ரேஷன் அரிசி கடத்தல் - குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு
கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சரயு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார், கடந்த ஏப்ரல் 30ம் தேதி, கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிலாரியை நிறுத்திய போலீசார் சோதனையிட்டனர். அந்த லாரியில் 50 கிலோ அளவிலான 144 மூட்டைகளில், 7,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மினி லாரியுடன் அரசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட, கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்தியமூர்த்தி(35), பில்லனக்குப்பம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க உணவு பாதுகாப்பு துறை ஐ.ஜி., ஜோசி நிர்மல்குமார் பரிந்துரைத்தார். கலெக்டர் சரயு உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.