வாலிபரை துப்பாக்கியால் சுட்டு துண்டு துண்டாக வெட்டியவர் கைது
குன்றத்துார் அருகே சிறுகளத்துார் செம்பரம்பாக்கம் ஏரியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கைப்பற்றப்பட்ட வழக்கில் கொலையாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் முண்டமாக ஏரியில் மிதப்பதாக, குன்றத்துார் போலீசாருக்கு டிச., 30ம் தேதி தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடல் மற்றும் இரு கால்களை மீட்ட நிலையில் தலை, கைகளை ஏரியில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், கொலையானவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து, தனிப்படை அமைத்து, காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பூமிநாதன், 34, என்பவரை காணவில்லை என, அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். விசாரணையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அணிந்திருந்த டி-சர்ட் அடையாளத்தை வைத்து, அது பூமிநாதன் என, அவரது பெற்றோர் உறுதிப்படுத்தினர். பூமிநாதனின் மொபைல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, கடைசியாக செம்பரம்பாக்கம் ஏரி அருகே இணைப்பு துண்டிக்கப்பட்டதும், குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியைச் சேர்ந்த பிலிப்குமார் என்பவரிடம் பேசியதும் தெரிந்தது. குன்றத்துார் போலீசார் பிலிப்குமாரை பிடித்து விசாரித்த போது, நண்பருடன் சேர்ந்து பூமிநாதனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.