திருட்டு வழக்கில் பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது
பெரியபாளையம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் திருடி கோடீஸ்வரரான பா.ஜ.க நிா்வாகி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்ததோடு 85 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கடந்த 22-ஆம் தேதி பெரம்பூா்பாட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவைகளை திருடியுள்ளனா். அதைத் தொடா்ந்து மா்ம நபா்கள் எடுத்து வந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாததால் மணிகண்டன் வீடருகே நிறுத்திவிட்டு, அந்த வீட்டிலிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றாா்களாம்.
இந்த நிலையில் மா்ம நபா்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை ஆய்வாளா் ஏழுமலை, பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனா்.
அதில் தொடா்புடைய நபா்கள் பூண்டி ஒன்றியம் தோமூா் பகுதியைச் சோ்ந்த திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவா் பிரபாகரன் மற்றும் பூண்டியைச் சோ்ந்த கேசவன் ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் தீவிரமாக விசாரணை செய்ததில், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்து ரூ. 51 லட்சம் மதிப்பிலான 85 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை ஆய்வாளா் ஏழுமலை மற்றும் உதவி ஆய்வாளா் சக்திவேல் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினாா். இதில் கைது செய்த இருவரில் பிரபாகரன் திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருடிய பணம் மற்றும் நகையை உருக்கி விற்பனை செய்து ரூ.1 கோடி மதிப்பில் கிராமத்தில் சொகுசான வீடு அமைத்துள்ளது தொடா்பாகவும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.