விழுப்புரம்.ரூ.1.50 கோடி மோசடி - முக்கிய நபர் கைது

விழுப்புரத்தில் தவணை முறையில் வீட்டுமனைகள் வழங்குவதாக கூறி, 180 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய நபர் கைது

Update: 2024-03-06 06:55 GMT

ஷாகுல்அமீது, 37

விழுப்புரத்தில் தவணை முறையில் வீட்டுமனைகள் வழங்குவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் ஷாகுல்அமீது, 37; இவரை சந்தித்த, விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர்களான நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோர், கடந்த 2014-ம் ஆண்டு, விழுப்புரம் அருகே கஸ்பாகாரணை கிராமத்தில் பிஸ்மி நகர் என்ற பெயரில் மனைப்பிரிவுகள் அமைத்துள்ளதாகவும், மாதம் ரூ.1,600 வீதம், 60 மாதங்கள் தவணை பணம் செலுத்தினால், அதற்குரிய வீட்டு மனைகள், பதிவு செய்து வழங்ப்படும் என்று கூறியுள்ளனர். இதேபோல், கடந்த 2016ம் ஆண்டில், விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் பகுதியில் ரோஜா நகர் என்னும் மனைப் பிரிவுகளை அமைத்து, அதில் மாதம் ரூ.1,200 வீதம் 55 மாதங்கள் பணம் தவணை செலுத்தினால், அதற்குரிய மனைகள் பதிவு செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பிய ஷாகுல்அமீது, ரூ.1,200 வீதம், 15 மாதங்கள் நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோரிடமும், அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களது நண்பர்களான அசாருதீன், ஷாஜி ஆகியோரிடமும் மாதாந்திர தவணை தொகையாக, மொத்தம் ரூ.18 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். இதே போல், பலரிடம் வீட்டுமனைகள் வழங்குவதாக, கடந்த 2016-ம் ஆண்டு முதல் 180 பேரிடம், ரூ.1.50 கோடி வரை வசூல் செய்து, அதற்குரிய மனைகளையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல், நத்தர்பாஷா உள்ளிட்ட 4 பேரும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதனிடையே சாதிக்பாஷா அவரது மனைவி பெயரில் ரூ.45 லட்சத்திலும், நத்தர்பாஷா அவரது மகனுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலும், கார் வாங்கிக்கொடுத்துள்ளனர். இதையறிந்து பாதிக்கப்பட்ட மக்கள், சாதிக்பாஷா உள்ளிட்ட 4 பேரிடமும் சென்று, வீட்டு மனைக்கு, தாங்கள் கட்டிய தவணை பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளனர். இதற்கு, தர முடியாது என்றும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தால், ஏற்கனவே பல பேருக்கு திவால் (மஞ்சள்) நோட்டீஸ் கொடுத்து பிரச்னையை முடித்ததுபோல், உங்களுக்கும் நோட்டீஸ் கொடுத்து முடித்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஷாகுல்அமீது உள்ளிட்டோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்தாண்டு புகார் செய்தனர். இதன்பேரில், நத்தர்பாஷா, சாதிக்பாஷா உள்ளிட்ட 4 பேர் மீதும், குற்றபிரிவு போலீசார் கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்து, கடந்த மே மாதம் சாதிக்பாஷாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வீட்டுமனை மோசடியில் தொடர்புடைய முக்கிய நபரான நத்தர்பாஷாவை,50; மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., ராமச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மருது, ராஜலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News