கருப்பட்டிபால் கோதுமை அல்வா! கருப்பா இருந்தாலும் கலக்கலான அல்வா!

Update: 2024-03-22 10:40 GMT

கோதுமை அல்வா

கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். மேலும் கருப்பட்டி கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்யவும, ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. இப்படிப்பட்ட கருப்பட்டியை நாம் அல்வாவாக செய்து கொடுக்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்கள்.வாங்க அல்வா எப்படி செய்வதென்று இந்தபதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்

கோதுமை-1 கப்

கருப்பட்டி-1 1/2 கப்

ஏலக்காய்-4

நெய்-5 டீஸ்பூன்

முந்திரி-10

செய்முறை :

முதலில் முழு கோதுமையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து விட்டு,6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கோதுமையை ஒரு மிக்ஸியில் போட்டு குறைந்த தண்ணீர் சேர்த்து இதனுடன் ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு வடிகட்டி அல்லது கையினால் பிழிந்து கோதுமை பால் எடுத்து தனியாக வைக்கவும்.

பிழிந்த கோதுமை கசடில் மீண்டும் தண்ணீர் சேர்த்து கருப்பட்டி சேர்த்து நன்றாக அரைத்து அதையும் வடிகட்டி வைக்கவும். (இப்படி செய்தால் கருப்பட்டியில் உள்ள கல் தூசு நீக்க ஏதுவாக இருக்கும்). இப்போது கோதுமை பால் மற்றும் கருப்பட்டி பால் தயார்.

அல்வா செய்ய ஒரு ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு அதில் கோதுமை பால் சேர்த்து நன்றாக கைவிடாமல் கட்டி ஆகாமல் கிளறவும். சிறிது கெட்டியானதும் கருப்பட்டி பால் சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும். நன்றாக கடாயில் ஒட்டாமல் வரும்.இடையில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நன்றாக கோதுமை கலர் திக்கான கலராக மாறி நன்றாக அல்வா பதத்திற்கு சுருண்டு வந்ததும் 2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து அல்வா -வில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

ஊற்றிய நெய் அனைத்தும் நன்கு உள்ளிழுத்து அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான கோதுமை பால் கருப்பட்டி அல்வா ரெடி.

Tags:    

Similar News