இந்த வார சமையல் டிப்ஸ் !!

Update: 2024-06-05 11:20 GMT

சமையல் டிப்ஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

1) வெண்டைக்காய் காரக்குழம்பு என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். ஆனால் அது இன்னும் கூடுதல் சுவையை கொடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வெண்டைக்காயை முதலில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதிலிருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி சுருள வதங்கி விடும். அதன் பின்பு. நீங்கள் காரக் குழம்பில் சேர்த்தால் குழம்பின் ருசியே அலாதியாக மாறும்.

2) பூரி மற்றும் சப்பாத்தி மாவு பிசையும் பொழுது மிருதுவாக வருவதற்கு கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பால் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெதுவெதுப்பான சுடு தண்ணீர் தெளித்து பிசைந்தால் மாவு மிருதுவாக மாறும். இதனால் சப்பாத்தியும் ரொம்பவே சாஃப்ட்டாக வரும்.

3) இட்லி அதிகமாக செய்து விட்டால் வீணாக தூக்கிப் போடாமல் சிலர் உப்புமா செய்வது வழக்கம். அப்படி இட்லி உப்புமா செய்யும் பொழுது இட்லிகளை தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊற வைத்து பின்னர் தண்ணீர் இல்லாமல் உதிர்த்து வைத்து தாளித்து உப்புமா செய்தால் உப்புமா வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.

4) நீங்கள் கடலை எண்ணெயை பயன்படுத்துவது உண்டு என்றால் முட்டை வேக வைக்கும் பொழுது நாலைந்து சொட்டுகள் கடலை எண்ணெய் சேர்த்து கொஞ்சம் கல் உப்பு போட்டு வைத்தால் போதும் முட்டையை வேக வைத்த பின் பிரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விட முடியும்.

5) உளுந்த வடை செய்யும் பொழுது உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்தால் போதும், சுலபமாக செய்து விடலாம். ஆனால் அதுவே மசால் வடை செய்ய வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற விட வேண்டும். அதற்கு பதிலாக கடலைப்பருப்பை நன்கு அலசிக் கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்தால் முக்கால் மணி நேரத்திலேயே நன்கு ஊறி விடும் அதன் பிறகு வடை செய்தால் நன்றாக வரும்.

6) தேங்காயை அதன் ஓட்டிலிருந்து இருந்து பிரித்தெடுக்க பலரும் அவதிப்படுவார்கள். அது போன்றவர்கள் அரை மூடி தேங்காயை மூடியுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு ஓட்டை கொஞ்ச நேரம் நெருப்பில் வைத்திருந்தால் போதும். எல்லா பக்கமும் நெருப்பு படும்படி இரண்டு நிமிடம் திருப்பி விடுங்கள். ஓடு தனியாகவும், தேங்காய் தனியாகவும் எடுக்க சுலபமாக இருக்கும்.

7) வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் நீங்கள் சமைக்கும் பொழுது கடைசியாக தான் வெட்டி வைக்க வேண்டும், இல்லை என்றால் அதன் மீது காற்றுபட்டு அதன் நிறம் கருப்பாக மாறிவிடும். அதற்கு பதிலாக ஒரு டீஸ்பூன் மோர் கலந்த தண்ணீரில் கத்திரிக்காய் மற்றும் வாழைக்காய்களை வெட்டி வைத்தால் நிறம் அப்படியே மாறாமல் இருக்கும். மேலும் தண்ணீரில் வெங்காயத்தை இரண்டாக வெட்டி ஊற வைத்து பின்னர் வெட்டினால் வெங்காயத்தில் இருக்கும் காரம் நீங்கி கண்களில் கண்ணீர் வராமல் இருக்கும்.

8) சமையலில் தாளிக்க கடுகு சேர்க்கும் பொழுது வெடித்து எல்லா பக்கமும் சிதறுகிறதா? அப்படி என்றால் நீங்கள் கடுகு போட்ட பின் கொஞ்சம் ஒரு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கடுகு வெடித்தாலும் மேலே எழுந்து சிதறாது. மஞ்சள் தூளின் பச்சை வாசமும் எண்ணெயில் போய்விடும்.

9) வெஜ் பிரியாணி, தேங்காய் பால் சாதம் போன்றவற்றை சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டு கூடவே சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளையும் அரைத்து வைத்துக் கொண்டால் சாப்பிடும் பொழுது இடையிடையே புதினா தட்டுப்படாமல் இருக்கும், மேலும் புதினாவின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். உணவின் சுவையும் அதிகரிக்கும்.

10) புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை எப்பொழுதும் தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. கழுவி நன்கு ஃபேன் காற்றில் காய வைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தால் போதும், ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

Tags:    

Similar News