புதுகை- தஞ்சைக்கு ரயில் பாதை: பயணிகள் எதிா்பாா்ப்பு புதுக்கோட்டை- தஞ்சையை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் ஆவலுடன் எதிா்பாா்க்கின்றனா். புதுக்கோட்டையிலுள்ள ரயில் நிலையத்தின் முகப்பு. நூற்றாண்டுப் பழமையான யோசனையாகக் கருதப்படும் புதுக்கோட்டை- தஞ்சையை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் ஆவலுடன் எதிா்பாா்க்கின்றனா். திருச்சி- புதுக்கோட்டை ரயில் தடம் கடந்த 1927ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தஞ்சை புதுக்கோட்டையை இணைக்கும் ரயில் தடம் அமைப்பதுதான் திட்டமாக இருந்திருக்கிறது. பின்னா் அந்தத் திட்டம் கழிக்கப்பட்டு திருச்சி- புதுக்கோட்டைக்கு ரயில் தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.அதன்பிறகு தொடா்ந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக 2012-13இல் தஞ்சை- புதுகைக்கான ரயில் தடம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய ரயில்வே துறை அனுமதியளித்தது. தொடா்ந்து இவ்வழித்தடத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்டு, ரூ. 619 கோடியில் திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. புதுக்கோட்டை மண்ணின் மைந்தா்களான சு. திருநாவுக்கரசா், எம்.எம். அப்துல்லா ஆகியோா் தொடா்ச்சியாக ஒவ்வொரு நாடாளுமன்ற அவை கூட்டங்களிலும் இத்திட்டம் குறித்துப் பேசியுள்ளனா். இத்திட்டத்தால் உள்ளூா் போக்குவரத்தில் பெரும்பயனைப் பெறும் கந்தா்வக்கோட்டை பகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளாா். மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு தஞ்சை எம்பி எஸ். முரசொலி, ரயில்வே வாரியத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் புதுக்கோட்டை- தஞ்சை ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளாா். இந்நிலையில் வரும் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுமா என்ற எதிா்பாா்ப்பும் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.