விதிகளை மீறி வாகனம் ஓட்டும் சிறுவர்கள்
இருசக்கர வாகனம் கனரக வாகனம் என லைசன்ஸ் பெறாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுச் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேலம், ஈரோடு, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு ஊர்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. பள்ளிபாளையத்தில் பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையத்தில் சிறு வயது சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சரக்கு ஆட்டோ ஓட்டுவது, டிராக்டர் போன்ற கனரக வாகனங்களை முறையான லைசன்ஸ் இல்லாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக ஓட்டி செல்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.இது மாதிரியான சூழலில் வாகனம் ஓட்டும் சிறுவர்கள் விபத்தில் இருக்கும்போது, எதிர்தரப்பில் பாதிக்கப்படுபவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்காத நிலை உள்ளது. இதுகுறித்து பள்ளிபாளையம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆட்டோ தொழிலாளி சண்முகம் என்பவர் கூறும் பொழுது, பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அரசு பள்ளிகள் உள்ள நிலையில், மாலை பள்ளி முடிந்து வரும் மாணவர்களில் ஒரு சிலர் பள்ளி சீருடைகளை கூட கழற்றாமல், அப்படியே இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு இருவர் முதல் நான்கு பேர் வரை ஒரே இருசக்கர வாகனத்தில் செல்வதை அதிகளவு காண முடிகிறது.18 வயது நிரம்பாத பள்ளி சிறுமிகளும் இதுபோல செல்வதை காண முடிகிறது .. போக்குவரத்து போலீசார் அவ்வப்போது இதுபோல வரும் சிறுவர்களை மடக்கி ப்பிடித்து அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுடைய பெற்றோர்களை வரவழைத்து உரிய அறிவுரைகளையும் கூறி அனுப்பி வருகின்றனர். இருந்தபோதிலும் முறையற்ற வகையில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இது இருசக்கர வாகனத்தோடு நிற்காமல், அதிகளவு சரக்கு ஆட்டோவை 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் லைசன்ஸ் ஏதும் பெறாமல் அதிவேகமாக ஓட்டிச் செல்கின்றனர். இதுகுறித்து ஒவ்வொரு பள்ளிகளிலும் போக்குவரத்து துறையின் சார்பில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . மிகக் குறைவான வயது உடைய சிறுவர்களிடம் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது வழக்குப் பதியவும் சட்டத்தில் இடம் உள்ளது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். முறையற்ற வகையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.