பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-08-14 04:19 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது...... பெரம்பலூர் மாவட்டத்தில் பச்சைமலையில் உருவாகும் மருதையாற்றின் குறுக்கே ஆதனூர் கிராமத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பணைக்காக ஆதனூர், கொட்டரை, பிலிமிசை மற்றும் குறும்பா பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். இவ்வாறு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும், இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்று அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை, அவற்றை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும், நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று வருவதற்கு போதிய பாதை வசதி இல்லாததால் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும், கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், கொட்டரை நீர்த்தேக்கத்தில் உள்ள சீமை கருவேலை மரங்களை அகற்றி அங்கு வரும் பறவைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். நீர்த்தேக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆதனூர் பேருந்து நிறுத்தம் அருகே கொட்டரை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலினால் அவ்வழியே வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த மருவத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது அவர்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச் சம்பவத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News