விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 17 பேர் கைது

வட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு

Update: 2024-11-23 16:24 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தங்கள் மனு அனுப்பியது சம்பந்தமாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை கேட்க வந்துள்ளனர். இதை அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் விவசாயிகளிடம் கேட்டுள்ளனர். வட்டாட்சியர் வெளியே சென்றிருந்ததால் வெகுநேரம் காத்திருந்துள்ளனர். அதன் பின்னர் வந்த வட்டாட்சியரிடம் மருதூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கதவணை அமைக்காத நிலையில் சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக இப்பகுதியில் ஐந்து இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தும் அரசு விரோதமாக அங்கிருந்த ஆற்று மணலை எடுத்து கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நிலையில் காவிரி ஆற்றில் நீரின்றி காணப்படும் சமயங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும் என்ற காரணத்தினால் சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை தடை செய்ய வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் சார்பில் ராஜ்குமார் என்கிற விருமாண்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்து தடை உத்தரவு பெற்றுள்ளனர். அதன்பின்னர் 48 நாட்கள் பிறகு தடை உத்தரவை நீக்கியுள்ளனர். மேலும் அரசு தரப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் குளித்தலை சார் ஆட்சியர் ஆகியோர் விவசாயிகளிடம் கதவணை குறித்து திட்ட அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த்தாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை 10 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு தகவலும் சார் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என கேட்டுள்ளார். அப்போது விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஒருவர் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலை பூட்டு போட்டு பூட்டி இருந்துள்ளார். இதை அறியாத அதிகாரிகள் வட்டாட்சியர் அறையில் பேசிக்கொள்ளலாம் என உள்ளே சென்றபோது கதவு பூட்டப்பட்டது தெரியவந்து கேட்டபோது உள்ளிருந்த ஒரு நபர் சாவிகொண்டு திறந்துள்ளார். அப்போது நீங்கள் யார் அலுவலகத்தை பூட்டுவதற்கு என கூறி வட்டாட்சியர் முன்னிலையில் அந்த நபரை போலீசார் வலுகட்டாயமாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையின் குறுக்கே அமைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் கேட்டு விவசாயிகளுடன் மனு அளிக்க வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைவரையும் போலீசார் வேனில் ஏற்ற முற்பட்டபோது விவசாயிகளை தவிர மற்ற பெண்கள் அங்கிருந்து விலகி சென்றனர். அப்போது பெண் காவலர்கள் துரத்தி சென்று அவர்களை பிடித்து வேனில் ஏற்றியபோது நாங்கள் மனு அளிக்க தான் வந்தோம் போராட்டம் செய்ய வரவில்லை என கூறி அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் நுழைந்து கதறி அழுதுள்ளனர். மற்ற 11 விவசாயிகளை அறிஞர் அண்ணா மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். 6 பெண்களை தபால் அலுவலகம் வளாகத்திலையே போலீசார் தங்க வைத்துள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டிய நபர் கைதானதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News