ராசிபுரம் அருகே குறிப்பிட்ட சமுதாயத்தினர் முன்னோர்கள் நினைவாக வழிபட்ட நடுகற்களை பிடுங்கி சாலையோரம் வீசப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு
ராசிபுரம் அருகே குறிப்பிட்ட சமுதாயத்தினர் முன்னோர்கள் நினைவாக வழிபட்ட நடுகற்களை பிடுங்கி சாலையோரம் வீசப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இறந்த முன்னோர்களின் நினைவாக அணைப்பாளையம் மொட்டபாறை பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் இடத்தில் நடுகல் வைத்து வழிபட்டு வந்தனர் . இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை, அதன் உரிமையாளர் அறக்கட்டளைக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அறக்கட்டளை சார்பில் அங்கிருந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வழிபாட்டு நடுகற்களை அகற்றப்பட்டதோடு, ராசிபுரம் புறவழிச்சாலையில் உள்ள ஏரியில் வீசப்பட்டதாக தெரிகிறது. அதை கண்டித்து அந்த சமுதாயத்தினர் ராசிபுரம் புறவழிச்சாலையில் சாலைமறியல் செய்ததோடு, ஏற்கனவே தாங்கள் வழிபட்ட இடத்தில் நடுகல்லை வைத்து வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து வந்த ராசிபுரம் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் ராசிபுரம் புறவழி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது ..