சுதந்திரதின விழா நாளை கொண்டாடப்படுகிறது.
கலெக்டர் பிருந்தாதேவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. சேலம் மாவட்டம் சார்பில் சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சுதந்திரதின விழாவையொட்டி நாளை காலை 9.05 மணிக்கு கலெக்டர் பிருந்தாதேவி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களை கவுரவிக்கிறார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குகிறார். மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பள்ளி கல்வித்துறை மூலம் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறுகின்றனர். நேற்று மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க நேற்று ரெயில்வே போலீசார் ஜங்ஷன் ரெயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து ரெயில் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளையும் தீவிர சோதனை செய்தனர். அதே போன்று புதிய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நகர் முழுவதும் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார்அபிநபு உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.