சாலையில் திரியும் மாடுகள், சரக்கு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்கள் அச்சம்
குமாரபாளையம் சாலையில் திரியும் மாடுகளால் மற்றும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலைகளில் மாடுகள், குதிரைகள் என கால்நடைகள் பல இடங்களில், சாலைகளின் நடுவில் செல்வதால், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாலையில் நடந்தும், மற்றும் டூவீலர்களில் செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்து வருகிறார்கள். இது போல் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கால்நடைகள் பறிமுதல் செய்து கோசாலைகளில் ஒப்படைக்க வேண்டும். மேலும் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட சாலைகளில் சரக்கு வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவதால் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட கடையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.