உடுமலை நாராயண கவிராயர் பிறந்தநாள் விழா அரசு சார்பில் மரியாதை
மாவட்ட வருவாய் அதிகாரி பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பூளவாடி கிராமத்தில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் தம்பதிக்கு கடந்த 25.09.1899 -ம் தேதியில் நாராயணகவி பிறந்தார்.பொதுவுடமை, சமத்துவம்,பெண்விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகள் கற்றறிந்தும்,விடுதலை போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடைகள் தோறும் பாடினார்.இவரது பங்களிப்பை பாராட்டி 1967-ம் ஆண்டு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் சாகித்ய ரத்னா விருது வழங்கப்பட்டது.அதே ஆண்டு தமிழக அரசு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.இவர் கடந்த 23.05.1981ல் பூளவாடி கிராமத்தில் காலமானார். அவரது நினைவை போற்றும் விதமாக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2001-ம் ஆண்டு உடுமலை குட்டை திடலில் மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மணிமண்டபம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பராமரிப்பு செய்யப்பட்டு ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாராயணகவி பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வரசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் ஆ.காளீஸ்வரன் நாராயணகவி உருவப்படத்தை வரைந்து பரிசளித்தார். உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்திற்கு நாராயணகவி பெயரை சூட்ட வேண்டும், மணிமண்டபத்தில் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடுமலை நாரயணகவி இலக்கிய பேரவை சார்பில் கோரிக்கை வைத்தனர் இந்த நிகழ்வில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் , உடுமலை வருவாய் கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணன்,வட்டாச்சியர் சுந்தரம் மற்றும் உடுமலை நாராயணகவி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.