நாமக்கல் மாவட்டத்தில் எரிந்த நிலையில் சடலங்கள் கண்டுபிடிப்பு. தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி ஏரியில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு, ராசிபுரம் காவல்துறை ஆய்வாளர் சுகவனம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி ஏரியில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு, ராசிபுரம் காவல்துறை ஆய்வாளர் சுகவனம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆத்தூர் செல்லக் கூடிய பாதையில் கோனேரிப்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் காலை 5 மணி அளவில் சடலம் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாக ராசிபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் போலீசார், இங்கே வந்து பார்த்தபோது பெண் உடல் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த சடலம் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பெண் சடலம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா ? என ராசிபுரம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அருகே நல்லிபாளையம் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் கீழே ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஸ் ஜோஷி, நல்லிபாளையம் ஆய்வாளர் யுவராஜ் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலமாக கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (45) என்பதும், இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சேலத்தில் உள்ள தனது அக்கா சாந்தி வீட்டில் வசித்து வந்ததுள்ளதும், லாரி பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. விஸ்வநாதனை கொலை செய்து எரித்துள்ளனரா என நல்லிபாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆண் மற்றும் பெண் சடலங்கள் எரிக்கப்பட்டு கருகிய நிலையில் சடலம் மீட்கப்படும் நிலை தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் வேறு இடத்தில் கொலை செய்து, தேசிய நெடுஞ்சாலையில் சடலங்களை எரித்து சென்றார்களா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.