மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா? - அண்ணாமலையை சாடிய கிருஷ்ணசாமி
ஆட்சியாளருக்கு எதிராக சுழற்ற வேண்டிய ‘சாட்டையை’ தனக்குத்தானே சுழற்றி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா? என அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்ட விவகாரம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குண்டூசி முனையளவு பிரச்சனைகளையும் பூதாகரமாக்கி 10 ஆண்டுகள் குறிப்பாக கடைசி இரண்டு ஆண்டுகள் அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தவர்களே இன்றைய ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியில் நடக்கும் ஒவ்வொரு அவலங்களையும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி மக்களின் மனங்களை ஆட்சி மாற்றத்திற்காக சூடேற்றுவதற்குப் பதிலாக அவற்றைத் தணிக்கும் வகையில் செயல்படுவது ஒரு வகையில் மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பான பிழையாகும். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்தது எளிதாக கடந்து செல்லக் கூடியது அல்ல; தமிழ்நாடு எங்கும் பொதுமக்கள், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக மீண்டும் மீண்டும் அடையாளப் போராட்டங்களே நடைபெறுகின்றன. அதுபோன்ற போராட்டங்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சனையைத் தீர்ப்பதற்கோ, வருங்காலங்களில் மாணவிகள் தங்களின் தன்மானத்தை பாதுகாப்பதற்கோ உதவாது. இந்நிலையில் அவற்றிற்கு நேர் எதிர் மாறாக தங்களை வருத்திக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டு வேடிக்கை போராட்டங்கள் நடத்துவது பிரச்சனைகளின் தன்மையை நீர்த்துப்போகச் செய்வதற்கும், அதை மடைமாற்றம் செய்வதற்குமே உதவும். தமிழக அரசியல்வாதிகள் ஆட்சியில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில், அவற்றை அரசியலாகவும் தனிமனித புகழை நிலைநாட்டுவதற்கான தளமாகவும் கருதாமல் - மக்களைப் பாதுகாக்க மானசீகமாக தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும். சாட்டைகளை ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சுழற்றுங்கள்! மாணவிகள், மக்களின் போராட்டங்களை, மழுங்கடிக்க மடை மாற்றம் செய்ய சுழற்றக் கூடாது.!’ எனத் தெரிவித்துள்ளார்