நீதி கேட்டு போராடினால் கைது செய்வதா? - தமிழக அரசுக்கு ஏபிவிபி கண்டனம்

மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து போராடியவர்களை கைது செய்த தமிழக அரசுக்கு ஏபிவிபி மாணவர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-12-27 17:11 GMT
இது தொடர்பாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 நாட்களுக்கு முன்பு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. திமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து ஏபிவிபி சார்பில், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் போராட்டம் நடத்திய, ஏபிவிபி-ன் வட தமிழக மாநில செயலாளர் யுவராஜ் தாமோதரன் உள்பட மாணவர்களை, ஏபிவிபி மாநில அலுவலகத்தில் டிச.27-ம் தேதி அதிகாலை 20-க்கும் மேற்பட்ட போலீஸார், தேச விரோதிகளை கைது செய்வதை போல கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீதி கேட்டு போராடும் மக்களின், குறிப்பாக மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு திமுக அரசின் உருட்டல் மிரட்டலுக்கு ஒரு காலமும் அஞ்சாது. கைது செய்யப்பட்டுள்ள ஏபிவிபி மாநில செயலாளர் மற்றும் மாணவர் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஏபிவிபி-யின் போராட்டம் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

Similar News