சேலத்தில் பெரியாரை இழிவுப்படுத்தி பேசியதாக கூறி
சீமான் உருவப்படத்தை எரித்து போராட்டம்
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இழிவுப்படுத்தி பேசியதாக பல்வேறு அமைப்புகள் சார்பில் சீமானை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்புலிகள் கட்சி சார்பில் சீமானை கண்டித்து சேலம் கோட்டை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாவட்ட செயலாளர் ராவணபிரபு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் உதயபிரகாஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் மாது உள்பட அக்கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தமிழ்புலிகள் கட்சியை சேர்ந்த சிலர் சீமானின் உருவப்படத்தை கிழித்தும், அதற்கு தீ வைத்தும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சீமான் படத்தை தீ வைத்து எரித்தவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் சீமானை கண்டித்து கோஷங்களை எழுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.