மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாணவர்கள் தங்களது கணவினை சுதந்திரமாக அடைய ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும்.;
![மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.](https://king24x7.com/h-upload/2025/01/27/784559-1001185487_1737990402731_1737993270419_1737993795748_1737993805161_1737993822645_1737993834535_1737993852071_1737993871636_1737994018164_1737995004394_1737995064575_1737995084817_1737995237260_1737995357751_1737995358927_1737995959386_1737995972914_1737996050340_1737996225533_1737996243425_1738004151921_1738007470208_1738015073498_1738015445336_1738015638437_1738016728274_1738018350214_1738018748264_1738018788972_1738018795442_1738019379550_1738019399529_1738019530192.webp)
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடையே தற்கொலையை தடுப்பற்கான முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பள்ளி பருவத்தில் மாணவச் செல்வங்களை பாதித்திடும் குழந்தை திருமணம், தற்கொலை முயற்சி செய்தல் மற்றும் போதைக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இன்றைய நவீன உலகம் போட்டிகள் நிறைந்தது, எனவே பெற்றோர்கள் மாணவச் செல்வங்களை ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அழுத்தம் தருதல் கூடாது. குறிப்பாக, மருத்துவத்துறையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அழுத்தம் தரக்கூடாது. மருத்துவ துறையில் மருத்துவர் மட்டுமல்லாமல், மருத்துவம் சார்ந்த உடலியக்க மருத்துவம், மருந்தாளுனர் மற்றும் செவிலியர் போன்ற பல்வேறு துறையிகளில் கவனம் செலுத்த ஊக்குவிக்கலாம்.எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஒரு துறையினை மட்டும் தேர்ந்தெடுத்து பயில வேண்டும் என வலியுறுத்தல் கூடாது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எண்ணங்களை கருத்தில் கொண்டு அவர்களது கனவினை சுதந்திரமாக அடைவதற்கு ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தல் வேண்டும். மாணவர்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக மாணவர்களை அழைத்து கலந்துரையாட வேண்டும். மீண்டும் மாற்றம் இருந்தால் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்தல் வேண்டும்.தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவன் குகேஷ் என்பவர் இளம் வயதிலேயே செஸ் ஒலிம்பியாட்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார். குகேஷின் பெற்றோர்கள் மருத்துவர்களாக இருந்த போதும் தனது மகனின் விளையாட்டு ஆர்வத்திற்கு முக்கியத்துவம் அளித்ததனால் தற்பொழுது அவர் உலக அளவில் இளம் வயது செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தது. அதேபோன்று, நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவம் பயிலும், மாணவி துளசிமதியும் விளையாட்டுத்துறையில் ஆர்வம் செலுத்தியதால் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.எனவே, பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் தரக்கூடாது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களை மனதளவிலும், உடலளவிலும் வலிமையானவர்களாக உருவாக்கிட தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமீப காலமாக, நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இளம் வயது கர்ப்பம் ஏற்படும் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவச் செல்வங்களும் நவீன உலகில் கல்வி தொடர்பான செயல்பாடுகளுக்கு மட்டும் அலைபேசிகளை பயன்படுத்தி தங்களது கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் செ.சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.