ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக நாகப்பட்டினத்திற்கு லாரியில் கடத்தி வந்த ரூ.27 லட்சம் கஞ்சா பறிமுதல்
லாரி டிரைவரை கைது செய்து விசாரணை
ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு லட்சுமணன், இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று சேலம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் அரூர்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், லாரியில் வெல்டிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் இருந்ததும், பின்னர் அவற்றை அப்புறப்படுத்தி பார்த்தபோது, 270 கிலோ கஞ்சா பதுக்கி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சேசு கும்மாலா (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை லாரியில் சேலம் வழியாக நாகப்பட்டினத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அனைவரையும் கூண்டோடு பிடிக்க மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.