260 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
மக்கள் தொடர்பு திட்டம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் ஊராட்சி ஆய்க்குடி கிராமத்தில், இன்று (14.08.2024) நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 260 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது: மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறைகளும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் மக்களைத் தேடிச் சென்று அப்பகுதி மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று அம்மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் தமிழக அரசின் மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இங்கு பல்வேறு அரசு துறைகளில் அலுவலர்கள் தெரிவித்த திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சார்பில் மொத்தம் 260 பயனாளிகளுக்கு ரூ.2,41,15,740 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு வழங்கினார். இந்நிகழ்வில் சார் ஆட்சியர் கோகுல் மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.