திருட்டு வழக்கில் தந்தை கைது - மகன் தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே திருட்டு வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-27 03:44 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காந்தி நகரை சேர்ந்தவர் பிரிதிவிராஜ்(37). பாஜக பிரமுகரான பிரிதிவிராஜ் கடந்த 21 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டில் பின்பக்க வழியாக நுழைந்த மர்ம நபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ 2,60,000 பணத்தை திருடி கொண்டு தப்பி ஓடினார்.

இது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பணத்தை திருடி கொண்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபர் குறிஞ்சாங்குளத்தை சேர்ந்த மலர் மன்னன் என்ற மாணிக்கம்(65) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மேல் பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் அவரை வீட்டில் இருந்த போது கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ 70,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் முன் காவல் நிலையத்தில் வைத்திருந்த மலர் மன்னனை பார்ப்பதற்காக அவரது மகன் கர்ணன்(24) சென்றதாகவும், பின்னர் காவல் நிலையத்தில் தனது தந்தையை பார்த்தபின் கர்ணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மலர் மன்னன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்து நேராக வீட்டிற்கு சென்ற மலர் மன்னன் மகன் கர்ணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்ணன் உடலை கை பற்றிய தாலுகா காவல் நிலைய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் கர்ணன் தனது தந்தையை காவல் நிலையத்தில் பார்த்த அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணமா என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News