
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் அரையந்தோப்பு பகுதி உள்ளது. கடல் சீற்றத்தால் தடுப்பு சுவர் மட்டுமின்றி, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தையே கடல் அடித்து செல்லப் பட்டது. இதனால் அங்கு வசித்து வந்த அனைத்து குடும்பத்தினரும் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். எனவே இந்த பகுதியில் நிரந்தர கடலரிப்பு தடுப்பு சுவர் அமைத்து, சாலை சீரமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இதையடுத்து கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் தமிழக அரசிடம் வைத்த கோரிக்கையின் பேரில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க 9 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, கடந்த ஒரு வருடம் முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சம்மந்தபட்ட துறையினர் கடந்த ஒரு ஆண்டுகளாக கடலரிப்பு தடுப்பு சுவர் பணி துவங்காமல் உள்ளனர். இன்னும் ஒரு சில மாதங்களில் மறுபடியும் பருவமழை காலம் துவங்கும் போது அந்த பகுதி சாலை மீண்டும் கடலில் அடித்து செல்லப்படும். எனவே இந்த சாலையை உடனடி சீரமைக்க வேண்டும் என கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் உள்ளிட்டோர் சென்னை தலைமை செயலக நெடுஞ்சாலை துறை செயலாளரை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர்.