மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
Update: 2023-11-03 02:40 GMT
சங்கரன்கோவில் வட்டார வளமையத்தின் சார்பில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நடைபயிற்சி உபகரணங்கள் (வாக்கர்), தேசிய அடையாள அட்டை போன்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துசெல்வி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் நோக்க உரை ஆற்றினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெய்வபிரியா வாழ்த்தி பேசினார். முகாமில் மனநல மருத்துவர் தேவிபிரபா கல்யாணி, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஜெயலட்சுமி, கண் மருத்துவர் முகமது அப்துல்லா, எலும்பு முறிவு மருத்துவர் விஸ்வநாத் பிரதாப்சிங் ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.