வீரராகவபுரம் கிராம மக்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்?
40 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்படுவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரராகவபுரம் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் அம்மையாண்டி ஊராட்சிக்கு உட்பட்டது வீரராகவபுரம் கிராமம், இப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ரராகவபுரம் - சாணாகரை இணைப்பு சாலை, கடந்த 40 வருடங்களாக சீரமைக்கப்படாமல் மண்சாலையாக இருந்து வருவதாகவும், இதன் காரணமாக, இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: 'வீரராகவபுரம் - சாணாகரை இணைப்பு சாலை சுமார் 3 கி.மீ., தூரம் உள்ளது. இந்த சாலை கடந்த 40 வருடங்களாக சீரமைக்கப்படாமல் மண்சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் நடக்கவோ, இரு சக்கர வாகனங்களோ கூட செல்ல முடியாத வகையில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், வீரராகவபுரம் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்கள், டிராக்டரை இப்பகுதியில் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
விளைபொருட்களை அருகில் உள்ள கீரமங்கலம் சந்தைக்கு கொண்டு சென்று, விற்பனை செய்ய முடியாமலும், கீரமங்கலம் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வர முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாணாகரை பகுதியில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், இப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஏனாதிகரம்பை மாயம்பெருமாள் கோவிலுக்கு மதளை எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். பொதுமக்கள், பக்தர்கள் குண்டுங்குழியுமான மண் சாலையில் சிரமப்பட்டு நடந்து வரும் நிலை உள்ளது.
இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், தென்னந்தோப்புகள் உள்ளன. தங்கள் வயல்களுக்கு டிராக்டர், உழவு இயந்திரம், கதிர் அறுக்கும் இயந்திரங்களையும், டிராக்டர்களையும் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும், ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல இந்த சாலையை தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியாக செல்லும் சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் நிலை அறிந்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 600 மீ., தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள 2.40 கி.மீ., தூரத்திற்கு சாலை இதுவரை செப்பனிடப்படாமல் உள்ளது. இதன் அருகிலேயே வீரராகவபுரம் மயானம் உள்ளது. 40 ஆண்டுகளாக பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக சாலையை அமைத்து தர வேண்டும். இல்லையேல் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்துள்ளனர்.