தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் துவக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் 2026-ல் அதிமுக ஆட்சி அமைத்ததும் மீண்டும் துவக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
EPS
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் தந்தோம். அதையும் நிறுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் செயல்படுத்துவோம். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 7.5% உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்து, 2818 பேர் இன்று மருத்துவம் படிக்கின்றனர். ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை கொடுத்தோம். அதையும் நிறுத்தியுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு கொண்டுவந்த 2000 அம்மா மினி கிளீனிக்களை மூடியுள்ளனர். ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை கூட ஸ்டாலினால் பொருத்துக்கொள்ள இயலவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும், 4000 அம்மா மினி கிளீனிக் தொடங்கப்படும். 207 அரசுப் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. அப்ப இந்த நிர்வாகம் எப்படி இருக்குன்னு எண்ணி பாருங்க. ஏழை மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என கல்விக்கு அதிக நிதி செலவிட்டது அதிமுக அரசு. அதையும் இப்போது குழி தோண்டி புதைக்கிறது இந்த திமுக அரசு. திமுகவில் இன்றைக்கு மூத்த எம்.எல்.ஏ துரைமுருகன் தான். மிசாவில் சிறை சென்றவர். அவருக்கு துணை முதல்வர் பதவி தரவில்லை. உழைப்பவர்களுக்கு அங்கு இடமில்லை. கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியுள்ளனர். துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அதிமுக. ஐ.பெரியசாமி, டி.ஆர் பாலு, கே.என் நேரு என இன்றைய அமைச்சர்களின் மகன்கள் எல்லாம் பொறுப்பில் உள்ளனர். அதிமுகவில் மட்டும் தான் சாமானியர் யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ, எம்.பி., துணை முதல்வர் ஆகலாம் என்றார்.