திமுகவிற்கு எதிராக விஜயை ஒரு கருவியாக பயன்படுத்துவதே பாஜகவின் நோக்கம்: திருமாவளவன்

ஆளுநர் இனியாவது அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-10-07 09:58 GMT

thiruma

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் விசிக சார்பில் வழங்கப்படும். உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை விசிக தலைமை அலுவலகத்தில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும். பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசாரணை குழு உயிரிழந்தவருக்கு வருத்தத்தையும், வேதனையையும் தெரிவிப்பதை விட திமுக மீது குற்றம் சாட்டுவது அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் அணுகுமுறை என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாராட்டக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இந்த கரூர் விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட இதை வைத்து அரசியல் செய்கிறாரே தவிர அங்கு நடந்த உண்மை நிலை பற்றி மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் அவர் செயல்பாடு இல்லை. ஆளுநரின் சமீபத்திய கூற்று வழக்கமான ஒன்றுதான், நீதிமன்றமே அவரை கண்டிக்கும் அளவிற்கு அதிகார வளர்ந்துகளை மீறி செயல்படுகிறார். ஆளுநருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். ஆளுநர் இனிமேலாவது இது போன்ற அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். விஜய்யோடு பாஜக கூட்டணி வைக்காது என்பது எனது நம்பிக்கை. ஆனால் விஜய்யை கருவியாக பயன்படுத்தி திமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியை கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்வது அவருடைய நோக்கம். குறிப்பாக இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட வாக்குகளை சிதறிக்க வேண்டும் என்ற வகையில் விஜய்யை பயன்படுத்துகிறார்கள். இதன் அடிப்படையில் தான் பாஜக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது, வலிந்து விஜய்க்கு ஆதரவு தருகிறார்கள். தேர்தல் வரும்போது திமுகவிற்கு எதிராக விஜயை களமிறக்குவது தான் பாஜகவின் எண்ணம். விஜய் சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் பாஜக விடாது. பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காரணத்தால் தங்களது பிரதிநிதிகளை வெவ்வேறு முகமூடி அணிந்து களம் இறக்குகிறார்கள்” என்றார்.

Similar News