விஜய் கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால் தான்: விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்

விஜய் கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால் தான் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-10-14 06:45 GMT

ravikumar

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவமான ரவிக்குமார் எம்.பி. எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "விஜய் தரப்பின் மனு மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பாஜகவின் பிடியில் விஜய் சிக்கிக் கொண்டு விட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால் தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம். திமுகவுக்குச் செல்லும் சுமார் 14% மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிர மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பது தான் பாஜகவின் திட்டம். அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர் தான் நடிகர் விஜய். பாஜகவை கொள்கை எதிரி என்பதும், திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும், காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பது போன்றத் தோற்றத்தை ஏற்படுத்துவதும் (இதற்குக் காங்கிரஸ் மேலிடத்தில் சிலர் இடமளிப்பது வேதனையானது) சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள். பாஜக அணியில் அவர் சேர்ந்து விட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய் விடும். அது மட்டுமின்றி அதிமுக வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பாஜக மற்றும் விஜய் ஆகியோரின் நோக்கமும் தோற்று விடும். எனவே, பாஜக அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பாஜக திட்டமிடும் எனக் கருதுகிறேன். பாஜகவினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித் தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர் தான் விஜய். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது ஏன் என்று கேள்வி எழுப்பி, அதற்கு ரவிக்குமார் எம்பி பதில் அளித்திருப்பது சமூக வலைதளங்களில் மிக வேகமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிக வேகமாக வைராலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News